மீண்டும் தொடங்கிய இந்தியா – சீனா நேரடி விமான சேவை! 5 ஆண்டுகளுக்கு பிறகு மலரும் நல்லுறவு?

கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் 2020ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த இந்தியா–சீனா இடையேயான நேரடி விமான சேவை, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலின் போது சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, பின்னர் லடாக் எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கிடையேயான விமான சேவையை மீண்டும் தொடங்குவது சிக்கலாக இருந்தது. இதனால், இந்தியா–சீனா பயணிகள் பல ஆண்டுகளாக மூன்றாம் நாடுகள் வழியாகவே பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், சமீப மாதங்களில் இரு நாடுகளின் உறவில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுடன் நிலவும் பனிப்போருக்கு மத்தியில், சீனா தனது ஆசிய உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசியது, இருநாட்டு உறவுக்கு புதிய திசையைத் தந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளுக்கிடையேயான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென அறிவித்தது. அதன் படி, கொல்கத்தா–குவாங்சூ இடையேயான இண்டிகோ விமான சேவை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மேலும், ஷாங்காய்–டெல்லி இடையேயான நேரடி விமான சேவை நவம்பர் 9ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related News

Latest News