டாலரின் ஆதிக்கத்திற்கு இந்தியா சவால்: ரூபாயை சர்வதேசமயமாக்க RBI அதிரடி நடவடிக்கை – டிரம்ப் அரசுக்கு அதிர்ச்சியா?

புது தில்லி: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் நீண்டகால ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக, இந்தியா ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரூபாய் மற்றும் பிற நாட்டு நாணயங்களில் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உள்கட்டமைப்பைத் தயார் செய்யுமாறு இந்திய க்ளியரிங் கார்ப்பரேஷனுக்கு (CCIL) உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ‘டீ-டாலரைசேஷன்’ முயற்சிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு:

இந்திய க்ளியரிங் கார்ப்பரேஷனின் (CCIL) 25வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்த முக்கிய அறிவுறுத்தலை வழங்கினார். “ரூபாயை சர்வதேசமயமாக்கும் பரந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டாலர் அல்லாத பிற நாணயங்களில் வர்த்தகம் மற்றும் தீர்வு சேவைகளை எளிதாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை CCIL ஆராய வேண்டும்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இது, டாலரைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகி, உலக அரங்கில் ரூபாயின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் இந்தியாவின் நீண்டகாலக் கொள்கையின் தெளிவான பிரதிபலிப்பாகும்.

மூலோபாய தன்னாட்சியும், அமெரிக்காவின் அதிருப்தியும்:

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது “மூலோபாய தன்னாட்சியை” (Strategic Autonomy) நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்தியா ஏற்கெனவே சில நாடுகளுடன் உள்ளூர் நாணயங்களில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. தற்போது, இந்த வரம்பை விரிவுபடுத்தவும், அதற்கான முறையான உள்கட்டமைப்பை உருவாக்கவும் ரிசர்வ் வங்கி களமிறங்கியுள்ளது.

முன்னதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், தங்களுக்கு இடையேயான வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக சொந்த நாணயங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இந்தியாவின் இந்தத் தனிப்பட்ட முயற்சி, மீண்டும் அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கும் முக்கியத்துவம்:

ரூபாயை சர்வதேசமயமாக்குவதோடு, உள்நாட்டு சில்லறை முதலீட்டாளர்களை வலுவாக்குமாறும் ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். அந்நியச் செலாவணி (‘Forex Retail’) மற்றும் அரசுப் பத்திரங்கள் (‘RBI Retail Direct’) தளங்களில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துமாறு அவர் CCIL-ஐக் கேட்டுக்கொண்டார். தற்போது அரசுப் பத்திர வர்த்தகத் தளத்தில் 300,000 சில்லறை முதலீட்டாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வலுவான பொருளாதாரத்தின் பின்னணி;

இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இந்தியாவின் வலுவான பொருளாதார நிலை உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.7 பில்லியன் டாலர் உயர்ந்து, $702.97 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த வலுவான கையிருப்பு, ரூபாய் மதிப்பை ஸ்திரப்படுத்தவும், இது போன்ற சர்வதேச முன்னெடுப்புகளைத் துணிச்சலுடன் மேற்கொள்ளவும் இந்தியாவிற்கு நம்பிக்கையை அளிக்கிறது.

Related News

Latest News