இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆப்கான் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைப்பேசி மூலம் பேசியிருப்பது அதிரவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானின் தாலிபான் நிர்வாகத்துடன் இந்தியா கலந்துரையாடுவது இதுவே முதல்முறை. இந்தியா ஆப்கான் உறவில் சுமூகமான முன்னேற்றம் ஏற்படுவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் தாலிபான்களுடன் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தகி உடனான உரையாடல் சிறப்பாக இருந்ததாகவும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த உரையாடலின்போது ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியா பாரம்பரிய நட்பையும், அவர்களின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்டதாகவும் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம் தெரிவித்திருப்பதால் முன்னதாக ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குத் தாலிபான்களே காரணம் என பாகிஸ்தான் கூறியிருந்தது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி என்பது அம்பலமாகியுள்ளது.