கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவி ஒருவரை அதே வகுப்பில் பயிலும் மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் 17 வயதுடைய மாணவி ஹன்சிகாவை, அதே வகுப்பில் படிக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவியிடம் காதலிக்க வேண்டும் என ஹர்ஷவர்தன் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவிக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து அந்த மாணவியை மீட்டு, அதே கல்லூரி குழுமத்திற்கு சொந்தமான கே.ஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, ஹர்ஷவர்தனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
