TNPSC தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி, தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உட்படப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 839 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, குறிப்பாகத் தொழில்நுட்பக் கல்வி பயின்ற தேர்வர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர், சாலை ஆய்வாளர், மீன்வள சார் ஆய்வாளர், சுரங்க முதலாள் மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர் என மொத்தம் 56 வகையான பதவிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma) மற்றும் பி.இ அல்லது பி.டெக் (BE/B.Tech) போன்ற இன்ஜினியரிங் படிப்புகளை முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்குமான தனித்தனி கல்வித் தகுதிகள் குறித்த விவரங்களைத் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, ஜூலை 1, 2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிகபட்ச வயது வரம்பு என்பது பிரிவுகளுக்கு ஏற்பவும், பதவிக்கு ஏற்பவும் மாறுபடும்.

குறிப்பாக, இளநிலை பயிற்சி அலுவலர் போன்ற பதவிகளுக்கு 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு முறையைப் பொறுத்தவரை, தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு கட்ட எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ள தேர்வர்கள் வரும் ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. இதுவரை டிஎன்பிஎஸ்சி-யில் ஒருமுறை பதிவு செய்யாதவர்கள் 150 ரூபாய் செலுத்தி ஒன்-டைம் ரிஜிஸ்ட்ரேஷன் (One Time Registration) செய்து கொள்வது அவசியமாகும்.

விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை திருத்திக் கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு வேலை கனவை நனவாக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதம் செய்யாமல் இப்போதே தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

Related News

Latest News