Thursday, January 29, 2026

மக்களே கவனமா நோட் பண்ணுங்க., பிப்ரவரி 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்..!

ஜனவரி மாதம் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டுடன் தொடங்கும் நிலையில், ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதத்திலும் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ள இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

எல்பிஜி சிலிண்டர்

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வழக்கம்போல் மாதத்தின் முதல் நாளான பிப்ரவரி 1 அன்று எல்பிஜி சிலிண்டர் விலைகளை திருத்தி அறிவிக்க உள்ளன. பட்ஜெட் தினத்துடன் இது ஒத்துப்போவதால், வீட்டு உபயோக 14 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர் விலைகள் சமீப காலமாக அடிக்கடி மாற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எல்பிஜி விலைகளுடன் சேர்த்து, விமான எரிபொருள் எனப்படும் ஏடிஎஃப் விலைகளும் பிப்ரவரி 1 அன்று திருத்தி அறிவிக்கப்பட உள்ளன. ஏடிஎஃப் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் விமான கட்டணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதேபோல், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிகரெட் விலை

பிப்ரவரி 1 முதல் பான் மசாலா மற்றும் சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படக்கூடும். புகையிலைப் பொருட்கள் மற்றும் பான் மசாலா மீது புதிய கலால் வரி மற்றும் செஸ் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ்க்கு பதிலாக இந்த புதிய வரிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை ஏற்கனவே உள்ள ஜிஎஸ்டி விகிதங்களுக்கு மேலாக விதிக்கப்படுவதால், பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும், பான் மசாலா மீது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்பட உள்ளது.

ஃபாஸ்டேக்

பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டேக் பயனர்களுக்கும் விதிமாற்றம் ஏற்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு கட்டாயமாக இருந்த ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) செயல்முறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

வங்கி விடுமுறை

பிப்ரவரி மாதம் வங்கி விடுமுறைகளுடன் தொடங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, வாராந்திர விடுமுறைகள் உட்பட, சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களுக்காக பிப்ரவரி மாதத்தில் சுமார் 10 நாட்கள் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால், வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இபிஎஃப்ஓ 3.0

இபிஎஃப்ஓ 3.0 திட்டம் 2026 ஏப்ரல் மாதம் முழுமையாக அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் இது தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

8வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக் குழு தொடர்பான தகவல்களும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என நம்பப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட ஊதியக் குழு தனது பணிகளை தொடங்கியுள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிஎம் கிசான்

இதற்கிடையே, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணை தொகை பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related News

Latest News