Friday, April 18, 2025

தங்க கடன் வாங்குபவர்களுக்கு புதிய தலைவலி..! RBI வெளியிட்ட புதிய அறிவிப்பால் சிக்கல்!

“இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக முக்கியமான இரட்டை அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. முதல் அறிவிப்பு – ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 முறை விகிதம் மாறாத நிலையில், இப்போது 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.5%லிருந்து 6.25%ஆக மாற்றப்பட்டுள்ளது. இது 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி எடுத்து இருக்கும் ஒரு பெரிய முடிவாகும்.  

இந்த விகிதக் குறைப்பால், வீடு, கார், மற்றும் வணிகக் கடன்களின் EMI குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்த கடன்கள் எல்லாம் EBLR எனப்படும் வெளிப்புற அளவுகோல் விகிதத்துடன் இணைக்கப்பட்டவை. மேலும், ஆர்பிஐ வட்டாரங்கள் கூறியதுபோல, அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழ் செல்லும் என்பதால், பொதுமக்களுக்கு மேலும் நன்மை கிடைக்கும்.  

இந்த சூழ்நிலையில்தான் இரண்டாவது அறிவிப்பு – தங்கக் கடனுக்கான புதிய ஒழுங்குமுறை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.  இப்போது வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் போன்ற எல்லா கடனளிப்பு நிறுவனங்களும் தங்கக் கடன் வழங்கும் போது ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க வேண்டும்.  

தங்கத்தின் மதிப்பும், தூய்மையும் சரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதற்காக சரியான gold appraiser-ஐ பயன்படுத்த வேண்டும். தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால், அவர்களுக்கு கடன் வழங்கக்கூடாது. திருட்டு நகைகள் அடகு வைக்கப்படுவதைத் தவிர்க்க கடனளிப்பவர்கள் பின்புல சரிபார்ப்பு செய்ய வேண்டும்.  

தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதி இல்லை. மேலும் தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள், அந்த நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.  

தங்கக் கடன் வாங்கும் நபர் அதை திருப்பி கொடுக்கும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். கடனுக்கான வட்டி தொகையை மாதந்தோறும் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை கடனளிப்பவர்கள் கண்காணிக்க வேண்டும்.  

முக்கியமாக, தங்க நகைகள் ஒரு வருட காலத்திற்குள் திருப்பி பெறப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரு நபர் 1 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை அடகு வைக்க அனுமதி இல்லை.

இந்த மாற்றங்கள் அனைத்தும், தங்கக் கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும், முறையானதாகவும் மாற்றும் என RBI இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த இரட்டை அறிவிப்பும் – வட்டி விகிதம் குறைப்பு மற்றும் தங்கக் கடனுக்கான ஒழுங்குமுறை மாற்றம் – மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Latest news