Thursday, December 26, 2024

மரண வாசலுக்கு கூட்டி செல்லும் மக்னீசிய சத்து குறைபாடு! அலட்சியம் காட்டினால் ஆபத்து

பொதுவான ஆரோக்கியத்திற்கும் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் அவசியமான நுண்சத்தாக அமைவது மக்னீசியம்.

ஆனால், முக்கியமான இந்த ஊட்டச்சத்தை பெரும்பாலான மக்கள் தினசரி தேவைக்கேற்ப பெறுவதில்லை. வளர்ந்த நாடுகளில் கூட 10இல் இருந்து 30 சதவீதம் மக்களுக்கு மக்னீசியம் குறைபாடு இருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.

மனித உடலில் புரதம் உருவாக்குதல், எலும்புகளை வலுப்படுத்துதல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம்.

உடற்சோர்வு, பலவீனமாக உணர்தல், குமட்டல், பசியின்மை மற்றும் வாந்தி மக்னீசியம் குறைபாட்டின் லேசான அறிகுறிகளாகும். மக்னீசியம் குறைபாட்டின் அளவு அதிகரிக்கும் போது இதய நோய், type 2 சக்கரை நோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஒற்றைத் தலைவலி போன்ற விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மக்னீசியம் குறைபாட்டினால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படக் கூடும் என்றாலும் முதியவர்கள், குழந்தைகள், மதுப்பழக்கம் உடையவர்கள், சக்கரை நோயாளிகள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களே இந்த சத்துக் குறைபாட்டுக்கு அதிகம் ஆளாகின்றனர்.

19 முதல் 51 வயதுள்ள ஆண்களுக்கு ஒரு நாளுக்கு 400 முதல் 420 மில்லிகிராம் மக்னீசியமும், பெண்களுக்கு 310-320 மில்லிகிராம் மக்னீசியமும் தேவைப்படும் நிலையில் திட்டமிடப்படாத அன்றாட உணவில் குறைவான அளவு மக்னீசியம் மட்டுமே கிடைக்கிறது.

பாதாம் போன்ற உலர் கொட்டை வகைகள், விதைகள், தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மக்னீசியம் மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது என எச்சரிக்கின்றனர்.

Latest news