போர் தாக்கம்; இந்தியாவில் LPG பயன்பாடு சரிவு!! காரணம் என்ன?

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையும், குறிப்பாக ஈரான் தொடர்பான போர் சூழலும் காரணமாக, இந்தியாவில் எரிவாயு பயன்பாடு கடந்த மார்ச் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (PPAC) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, எல்பிஜி பயன்பாட்டில் பெரும் சரிவு பதிவாகியுள்ளது.

2025 மார்ச் மாதத்தில் 2.729 மில்லியன் டன்னாக இருந்த எல்பிஜி பயன்பாடு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.379 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இது 12.8 சதவீத சரிவைக் குறிக்கிறது. குறிப்பாக, வீட்டு உபயோக விநியோகம் 8.1 சதவீதம் குறைந்துள்ளதுடன், வணிக ரீதியான விநியோகம் 48 சதவீதமும், பெரிய தொழில்துறை பயன்பாடு 75.5 சதவீதமும் சரிந்துள்ளது.

இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. இந்த முக்கிய கடல் வழியை ஈரான் மூடியதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த சிக்கலை சமாளிக்க, இந்தியா உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 11 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுவதால், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. வருங்காலத்தில் நிலைமை சீராகுமா என்பது சர்வதேச சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கும்.

Related News

Latest News