புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை ஆகியவை தொடர்ந்து மூன்று நாட்கள் வந்ததையடுத்து, மக்கள் பெருமளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். இதன் விளைவாக, உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணங்கள் சர்வதேச விமானங்களின் கட்டணங்களுக்கு இணையாக உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பலர் இந்த நீண்ட விடுமுறையை பயன்படுத்தி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் இருக்கைகள் விரைவாக நிரம்பியதால், பலர் விமானப் பயணத்தை தேர்வு செய்தனர். இதன் காரணமாக, விமான டிக்கெட்டுகளுக்கான தேவை திடீரென உயர்ந்ததால், கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்தன.
அதன்படி, ரூ. 4,966 ஆக இருந்த சென்னை – கோவை விமான கட்டணம், வியாழக்கிழமை ரூ. 16,496 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமான எரிபொருள் விலை உயர்ந்த நிலையில் இருந்ததால் கட்டணங்கள் அதிகமாக இருந்தன. இதனுடன் தொடர்ந்து விடுமுறை காரணமாக தேவை அதிகரித்ததால் கட்டணங்கள் மேலும் உயர்ந்தன.
மேலும், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களுக்கும், கோவை நோக்கி செல்லும் விமானங்களுக்கும் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
