‘மூன்றாவது முறையும் நான்தான் அதிபர்!’ டிரம்ப் கனவு நிறைவேறுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு தடையாக உள்ள அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் இரண்டு முறை பதவி வகித்த பின் விலகி ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்தினார். ஆனால், Franklin D. Roosevelt 1932 முதல் 1944 வரை நான்கு முறை தேர்தலில் வென்று 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இதன் பிறகு அதிபர் பதவிக்காலத்திற்கு வரம்பு விதிக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

இதன் அடிப்படையில், 1947ம் ஆண்டு காங்கிரஸில் முன்மொழியப்பட்ட 22ஆவது சட்டத்திருத்தம், 1951 பிப்ரவரி 27ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன் படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக
தேர்ந்தெடுக்கப்படலாம். தற்காலிக அதிபராக இரண்டு ஆண்டுகள் மீறி பதவி வகித்திருந்தால், அவர் ஒருமுறை மட்டுமே மீண்டும் போட்டியிட முடியும் என சட்டம் கூறுகிறது.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45ஆவது அதிபராக இருந்த டிரம்ப், தற்போதைய சட்டப்படி 2028ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அதே சமயம், இந்தத் தடையை நீக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்ற கருத்தும் பரவியுள்ளது. ஆனால், அந்தத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டுமெனில் காங்கிரஸின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

தற்போது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் வலிமை சமமாக இருப்பதால், இத்தகைய திருத்தம் நடைமுறைக்கு வருவது சாத்தியமற்றது என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Related News

Latest News