ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் பேருந்து ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் பயணம் செய்துள்ளார். சிறுமி தனியாக வந்ததை அறிந்துகொண்ட கிளீனர் ஜன்னலில் உள்ள துணியை மூடும் போது சிறுமியின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. பின்னர் பேருந்து ஓட்டுனரிடம் செல்போன் கொடுத்து சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஆனதும் செல்போனை எடுக்க சிறுமி சென்றாள். அப்போது அங்கு வந்த கிளீனர், செல்போன் வேண்டும் என்றால், தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பல முறை கூறி கட்டாயப்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நடுரோட்டில் வைத்து அவரின் ஆடைகளை கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிளீனரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் ஆரிப் கான் என்று தெரிந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.