தமிழகத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் 2002 மற்றும் 2005 ஆண்டுகளில் உருவான பழைய வாக்காளர் பட்டியல்களை இணையத்தில் நேரடியாக பார்வையிடலாம். இதனால், பெயர், வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் எண் போன்ற விவரங்களை சரிபார்க்க மற்றும் தேவையான திருத்தங்களை எளிதாகச் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR என்று செல்லப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அலுவலர்கள் வீடு தோறும் சென்று மக்கள் விவரங்களை சேகரிக்கின்றனர். இதற்காக பழைய வாக்காளர் பட்டியல்களை அணுகி, விவரங்களை சரிபார்ப்பது முக்கியமாகும். SIR-2002 அல்லது SIR-2005-ல் உங்கள் பெயர் அல்லது பெற்றோரின் பெயர் இருந்தால் கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. பெயர் இல்லையெனில், அதிகாரப்பூர்வ சான்றுகளின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
2002ம் ஆண்டு நீங்கள் வாக்களித்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடியை நினைவில் வைத்து, திரையில் கொடுக்கப்பட்ட (https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx) தளத்தில் பார்வையிடலாம். அங்கே பெயர் இருந்தால், அந்த வாக்காளர் எண் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை பதிவு செய்து, திரையில் தெரியும் (https://erolls.tn.gov.in/electoralsearch/) தளத்தில் சரிபார்க்கலாம். தேவையான தகவல்களை https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in/ElectoralRolls.aspx தளங்களிலும் காணலாம்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.elections.tn.gov.in)
மூலம், பழைய வாக்காளர் பட்டியல் விவரங்களை மக்கள் எளிதாகப் பார்க்க முடியும். புதிய இணைய வசதி, தற்போது நடந்து வரும் திருத்தப் பணிகளில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் உதவியாக அமையும். இதன் மூலம் வாக்காளர் விவரங்களில் பிழைகள் குறைந்து, பட்டியல் முழுமையாக புதுப்பிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாக்காளர்கள், தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போகலாம் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
