Saturday, January 18, 2025

சும்மா இருந்தே ரூ.6 கோடி கல்லா கட்டுறார். அப்படி என்ன பிசினஸ்?

‘சும்மா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாத்தான் தெரியும்’ என நடிகர் வடிவேலு ஒரு காமெடியில் சொல்லியிருக்கார். அப்படிப்பட்ட வேலைதான் இந்த இளைஞர் செய்யும் வேலை. ஜப்பானின் டோக்யோவைச் சேர்ந்த ஜோஷி மோரிமோட்டோ கல்லூரிப்படிப்பை முடித்து பல நிறுவனங்களில் வேலைகளைப் பார்த்து வந்தார். ஆனால், அவருக்கு வேலை பார்ப்பதே பிடிக்கவில்லை.


அதனால் பைசா கூட முதலீடு இல்லாமல், மூளையைக் கசக்காமல், வியர்வை சட்டையில் ஒரு பொட்டும் நனையாமல் இவரே ஒரு தொழிலைத் தொடங்கியிருக்கிறார்.அது தான் தன்னைத் தானே ‘நட்புக்காக‘ வாடகைக்கு விடுவது. உலகில் கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. அதன் வலி புறையேறினால் தலையில் தட்டிவிடக் கூட ஆள் இல்லாதவர்களுக்கு நன்கு புரியும்.

இது வாழ்க்கையையே ஒருவித வெறுமைக்குள் தள்ளி தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் அவலங்களுக்கும் தள்ளிவிடும். (Disclaimer – தற்கொலை எதற்கும் தீர்வல்ல, இலவச மன நல ஆலோசனைக்கு அரசின் 104 என்ற எண்ணை அழைக்கவும்)

உண்மையில் பிரச்னைகளை மனம் விட்டுப் பேச ஆள் இல்லாமல் ஒரு வித டிப்ரசனிலேயே இருப்பவர்களும் உண்டு.
அவர்களுக்கான ’நண்பன்’ சேவையை ஜோஷி வழங்கி வருகிறார். இவர் சமூக வலைதளத்தில் இந்த சேவையை அறிவித்ததும் 3000 அழைப்புக்கள் குவிந்துவிட்டனவாம். தனிமையைப் போக்குவதற்கான தேவை அங்கு அதிகரித்து இருந்தது இதன் மூலம் தெரியவந்தது. அவர்களுக்கு உதவியாக செல்லும் ஜோஷி வீடு சுத்தம் செய்ய உதவுவது, சமைக்க உதவுவது போன்ற கடுமையான வேலைகளைச் செய்ய மாட்டேன் என சொல்லிவிடுவாராம்.

அப்படி என்ன வேலை செய்கிறார் எனக் கேட்கிறீர்களா? சற்று நேரம் காஃபி சாப்பிட்டுவிட்டு அரட்டையடிக்க, ஒன்றாக சேர்ந்து கேம் விளையாட, சினிமா, பார்க், பீச் ஆகிய இடங்களுக்கு சென்றுவர, ஷாப்பிங் போகும்போது ஜாலியாக உடன் செல்ல என சில லேசான வேலைகளை செய்கிறார். இது பற்றி அவர் மனம் திறந்து பேசினார். அதில் ‘மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும் சிலர் தனது ஆழ்ந்த தனிப்பட்ட கசப்புக்களை தன்னுடன் பகிர்ந்த பின் லேசாக உணர்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு சிலரைப் பற்றி தெரியவரும்போதே பரிதாபமாக இருக்கும். இதன் பின்விளைவு அவர்களும் வெளிவிடும் நெகடிவ் வைப் எனக்கும் வரும். ஆனால், அடுத்த நபரைச் சந்திக்கும் முன் என் மனதை சுத்தப்படுத்திக் கொள்வேன்‘ என சொல்லியிருக்கிறார் ஜோஷி. ஆனால், ஒருபோதும் பாலியல் சேவைகளுக்கு செல்வதில்லை என்றும் நல்ல, கண்ணியமான நண்பன் மட்டுமே என சொல்லியிருக்கிறார்.


ஒரு மணி நேரம் நண்பனாக இருக்க இவர் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் கட்டணமாக வாங்குகிறாராம். அந்த வகையில் கோடிக்கணக்கில் கல்லாக் கட்டி வருகிறார் ஜோஷி. இந்த மாதிரியான ஒரு நட்பு சேவை தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி வேலை வாங்குவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்டில் சொல்லுங்கள். . .

Latest news