சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்பெற்று எழுந்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த பின், அரிதினும் அரிதாகக் கோடியில் ஒருவர் உயிர் பிழைத்துக்கொள்ளும் அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எரியூட்டக் கொண்டுசெல்லும்போது அங்கே உயிர் பிழைத்த அதிசயத்தையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல், ஒரு சம்பவம் பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக கோன்சாலோ மோன்டோயோ ஜிமினெஸ் என்ற 29 வயது வாலிபர், வடமேற்கு ஸ்பெயினில் உள்ள அஸ்டூரியாஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். கடுமையான பாதுகாப்பு கொண்ட இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஜிமினெஸ் கைகால் வலிப்புக்காக மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அங்கு பணியிலிருந்த இரண்டு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது சுயநினைவின்றி இருந்துள்ளார். சிறிதுநேரம் கழித்து மறுபடியும் அவரைப் பரிசோதித்த அந்த 2 மருத்துவர்களும் ஜிமினெஸ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பிறகு, ஒரு மணி நேரம் கழித்துத் தடயவியல் மருத்துவர் ஜிமினெஸ்ஸின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தார். அவரும் ஜிமினெஸ் இறந்துவிட்டதாக அறிக்கை அளித்தார்.
அதைத் தொடர்ந்து ஜிமினெஸின் உடல் சவக்கிடங்கிற்குக் கொண்டுசெல்லப்பட்டது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஜிமினெஸின் உடல் அசையத் தொடங்கியுள்ளது. அதனைக்கண்ட சவக்கிடங்கு பராமரிப்பாளர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அங்குவந்த மருத்துவர்கள், அவரது உடலைப் பரிசோதித்து ஜிமினெஸ் உயிரோடு இருப்பதை அறிந்து வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 24 மணி நேரத்துக்குப் பின் முற்றிலும் குணமடைந்தார் ஜிமினெஸ்.
கண்விழித்துப் பார்த்ததும் ஜிமினெஸ், நான் என் மனைவியைப் பார்க்க முடியுமா என்று கேட்டதுதான் ஆச்சரியம். டாக்டர்கள் மயக்கம் அடையாத குறைதான் போங்க…
சில ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.