Friday, January 30, 2026

‘இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை’ – பிரபல பாடகர் முடிவு, ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங் 38 வயதில், கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ‘ஆஷிக் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் இந்திய அளவில் பெரும் புகழைப் பெற்றார்.

அவரது இசைப் பயணத்திற்கு அங்கீகாரமாக, கடந்த ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கவுரவித்தது. இதுவரை பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை அர்ஜித் சிங் பாடியுள்ளார்.

தமிழில், சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘நான் உன் அருகினிலே’ என்ற பாடலை அவர் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அறிவித்துள்ளார். இருப்பினும், திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜித் சிங் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையை நான் கைவிடவில்லை. இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜித் சிங்கின் இந்த திடீர் முடிவு, அவரது ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News