அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழுத்தங்களையும் மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல், கிரீன்லாந்து தெளிவான முடிவை அறிவித்துள்ளது. “எங்களுக்கு அமெரிக்காவுடன் இணைவதற்கான விருப்பம் இல்லை. நாங்கள் டென்மார்க்குடன் தான் தொடர விரும்புகிறோம்” என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெட்ரிக் நீல்சன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இந்த முடிவு கிரீன்லாந்துக்கு “பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து, கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சிப்பேன், அவசியம் ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கைகளையும் பரிசீலிப்பேன் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிரீன்லாந்து பிரதமர், “இது ஒரு முக்கியமான பூகோள அரசியல் நெருக்கடி. அமெரிக்காவா அல்லது டென்மார்க்கா என்ற தேர்வு வந்தால், நாங்கள் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம். எங்களது முழு சுதந்திர கோரிக்கையையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, தற்போது ஒற்றுமையையே முக்கியமாக கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ட்ரம்பிடம் நிருபர்கள் கேட்டபோது, “அவர் யார் என்பதே எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்குக் கவலையும் இல்லை. ஆனால் இந்த முடிவு அவர்களுக்கே தலைவலியாக மாறும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
கிரீன்லாந்தின் மக்கள் தொகை சுமார் 57,000 பேர் மட்டுமே. இருந்தாலும், அமெரிக்காவுடன் இணைவதற்கான எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஒரு சிறிய தீவுக்காக உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இவ்வளவு தீவிரமாக செயல்படுவது, உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
