Monday, August 25, 2025
HTML tutorial

மனைவிக்கு காதல் பரிசாக சுழலும் வீட்டைக்கட்டிய கணவர்

மனைவியை மகிழ்விக்க சுழலும் வீடு ஒன்றைக் கட்டி அசத்திய 72 வயது கணவர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.

அவர் கட்டிய சுழலும் வீடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வருகிறது.

வானிலும் கடலிலும் திருமணத்தை வித்தியாசமான முறையில் சிறப்பாக நடத்தி தன் அன்பை வெளிப்படுத்துவோர் அநேகம். அந்த அன்பு என்றும் குறையாமல் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கிறதா என்றால், கேள்விக்குறிதான்.

ஆனால், வடக்குப் போஸ்னியா நாட்டின் சிர்பக் நகரில் வாழ்ந்து வரும் வோஜின் குசிக் 72 வயதிலும் தன் மனைவிமீது அதீதப் பாசத்தோடு இருப்பதைத் தன் மாறுபட்ட செயலால் நிரூபித்துள்ளார்.

திருமணமான புதிதில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அதில் தனது 3 மகன்களோடு வசித்துவந்தார். என்றாலும், அவரது மனைவியால் வீட்டிலிருந்தபடி சாலையைப் பார்க்கமுடியவில்லை. வீட்டுக்குள் சூரிய வெளிச்சம் வரவில்லை. அதனால் வீட்டை மனைவியின் விருப்பப்படி மாற்றியமைக்கத் தொடங்கினார்.

ஒரு மின்மோட்டார் மற்றும் பழைய ராணுவ வாகனத்தின் சக்கரங்களைப் பயன்படுத்தி, தானே சுழலும் வீட்டை உருவாக்கியுள்ளார். பச்சை முகப்புடனும், உலோகத்தினாலான சிவப்புக் கூரையுடனும் அந்த வீடு பசுமையாக உள்ளது.

பண்ணை நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டின் சூழலும் வேகத்தை விருப்பத்துக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். 6 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடு பூகம்பத்தால் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியறிவில்லாத ஏழைக்குடும்பத்தில் பிறந்த வோஜின் இதுபற்றிக் கூறியபோது, ”இது புதுமை அல்ல. இதுபோன்ற வீட்டைக் கட்டுவதற்கு அறிவும் விருப்பமும் இருந்தால் போதும்” என்கிறார்.

தொடர்ந்து பேசும் அவர், ”எனக்கு வயதாகிவிட்டால் நான் செய்துவந்த தொழிலை என் மகன்கள் செய்துவருகின்றனர். அதனால் எனக்குப் போதுமான நேரம் கிடைக்கிறது. என் மனைவியைக் காதலிக்கவும் போதிய நேரம் கிடைக்கிறது” என்கிறார் வெட்கம் கலந்த புன்னகையோடு.

இந்த வீட்டில் வசிப்பதன்மூலம் தன் ஆயுள் நீளும் என்றும் கூறுகிறார் நம்பிக்கையோடு.
காதல் மனைவியோடு நீண்டகாலம் வாழவேண்டுமல்லவா?

மனைவியை நேசிக்கிறவங்களாலதான் இதுமாதிரி புதுமையாகச் செய்யமுடியும்….

நீங்க உங்க மனைவியை நேசிக்கிறவங்கதானே…,உங்க மனைவிக்காக என்ன செய்தீங்கன்னு கேட்குறீங்களா?

சாரி பாஸ்-…எனக்கு இன்னும் ஒருமுறைகூட கண்ணாலம் ஆகல…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News