அரசு மருத்துவமனைகளில் புறநோயாளி சீட்டு, அதாவது ஓபி சீட்டு வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவதிக்கு இப்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் “நலம் ஏஐ” (Nalam AI) என்ற புதிய வாட்ஸ்அப் சாட்போட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே, நாம் வீட்டிலிருந்தபடியே நமது மொபைல் போன் மூலமாகவே ஓபி சீட்டை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், தற்போதே நடைமுறையில் மிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்தச் சேவையைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. பொதுமக்கள் முதலில் தொன்னூற்று ஆறு ஒன்று ஒன்பது இரண்டு இரண்டு இரண்டு ஒன்பது ஒன்பது ஒன்பது (96192 22999) என்ற எண்ணை தங்களது மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வாட்ஸ்அப்பில் அந்த எண்ணிற்கு ‘ஹாய்’ (Hi) என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனே உங்களுக்கு நலம் ஏஐ பக்கத்திலிருந்து வரவேற்பு செய்தி வரும். அதில் உங்களுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நாம் தமிழ் மொழியைத் தேர்வு செய்தவுடன், ‘உள்நுழையவும்’ என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து நமது மொபைல் எண்ணை உள்ளீடு செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல், அதாவது ஓடிபி (OTP) வரும். அதை என்டர் செய்ததும் உள்நுழைவு வெற்றிகரமாக முடிந்துவிடும். அதன் பின்னர் வரும் சேவைகளில் ‘புதிய நோயாளியைப் பதிவு செய்க’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
தொடர்ந்து நோயாளியின் பெயர், வயது, பாலினம் போன்ற எளிய விவரங்களைக் கொடுத்து, நமது மாவட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது சென்னை உள்பட இருபத்தி இரண்டு மாவட்டங்களில் இச்சேவை பயன்பாட்டில் உள்ளது. நமது மாவட்டத்தைத் தேர்வு செய்தவுடன் அங்குள்ள அரசு மருத்துவமனைகளின் பட்டியல் தோன்றும். அதில் நாம் செல்ல வேண்டிய மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தால், உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, நமக்கான ஓபி சீட்டு பிடிஎஃப் (PDF) வடிவில் வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும்.
இதில் ஒரு பார் கோடு மற்றும் உங்களுக்கான பிரத்யேக பின் நம்பர் இருக்கும். மருத்துவமனைக்குச் செல்லும்போது இந்த பிடிஎஃப் கோப்பை உங்களது மொபைல் போனில் காட்டினாலே போதுமானது, காகிதச் சீட்டு ஏதும் தேவையில்லை.
மேலும், ‘இ-நலம் தமிழ்நாடு’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் மருத்துவர் எழுதும் மருந்துச் சீட்டுகள் மற்றும் இரத்தப் பரிசோதனை முடிவுகள் போன்ற உங்களது ஒட்டுமொத்த மருத்துவக் குறிப்புகளையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் இந்த “நலம் ஏஐ” வாட்ஸ்அப் சேவைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
