பல நேரங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் திடீரென காலியாகிவிட்டால் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மதிய உணவு அல்லது இரவு உணவு சமைக்கும் நேரத்தில் கேஸ் தீர்ந்துவிட்டால், சமையல் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் உருவாகும். Extra சிலிண்டர் இல்லாவிட்டால் விழிபிதுங்கிவிடும். இதைத் தவிர்க்க, சிலிண்டரில் எரிவாயு எவ்வளவு உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்.
வீட்டிலேயே எரிவாயு அளவை தெரிந்துகொள்ள சில எளிய முறைகள் உள்ளன. முதலில், சூடான நீர் சோதனை. சிலிண்டரின் மேற்புறத்தில் சிறிது சூடான நீரை ஊற்றி, சில வினாடிகள் கழித்து கையால் தொட்டால், எரிவாயு உள்ள பகுதி குளிர்ச்சியாகவும், எரிவாயு இல்லாத பகுதி சூடாகவும் இருக்கும். இதன் மூலம் மீதமுள்ள எரிவாயுவை எளிதில் அறியலாம்.
இரண்டாவது, சிலிண்டரின் எடை கணக்கிடுதல். டிஜிட்டல் எடை இயந்திரத்தில் அளந்தால், காலியான சிலிண்டர் சுமார் 15 கிலோ இருக்கும். 18-19 கிலோ வரை எடை இருந்தால், எரிவாயு விரைவில் தீர்ந்துவிடும் எனக் கருதலாம்.
மூன்றாவது, எரிவாயு சுடரை கவனித்தல். சுடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறினால், அல்லது சமைப்பதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அது எரிவாயு குறைவைக் குறிக்கும்.
தற்போது சந்தையில் ஸ்மார்ட் எரிவாயு மானிட்டர்கள் கிடைக்கின்றன. இவை சிலிண்டரில் ஒட்டி அல்லது அடியில் வைக்கப்பட்டு, எரிவாயு நிலையை மொபைல் ஃபோன் பயன்பாட்டின் மூலம் காட்டும்.
மேலும், வாரத்திற்கு ஒரு முறை சிலிண்டரைச் சோதனை செய்து, முன்கூட்டியே புதிய சிலிண்டரை முன்பதிவு செய்வது பாதுகாப்பான வழி. இதனால் சமையல் இடையூறு இல்லாமல் தொடர முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.