உயிரை குடிக்கும் ஆன்லைன் ரம்மி

392
Advertisement

தொலைக்காட்சி, மொபைல் போன் என எந்த பக்கம் திரும்பினாலும் அதிக பணம் ஈட்டலாம், செல்வந்தராக மாறலாம் போன்ற கவர்ச்சி சொற்றோடர்களோடு வசீகரிக்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் தொடர்ந்து நம் கண்களில் பட்டுக்கொண்டே உள்ளது.

ஒரு முறை தங்கள் வலையில் சிக்கும் நபர்களை வெளியில் விடாமல் பார்த்துக்கொள்ள ரம்மி நிறுவனங்கள் கையாளும் ராஜதந்திர யுக்திகள் ஏராளம்.

சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைன் ரம்மியில் களம் இறங்கும் நபர்களை, மெதுவாக ரம்மி விளையாட்டுக்கு முதலில் அடிமையாக்குவது தான் ரம்மி நிறுவனங்களின் முதல் வெற்றி.

உண்மையில் பணம் வெல்ல வாய்ப்புள்ளது என நம்ப வைப்பதற்கு சிறு தொகையை அவ்வப்போது ரம்மி விளையாடுபவர்களுக்கு அளிப்பதே மீனை பிடிக்க போடும் தூண்டில் இரைக்கு நிகரானது என்றால் மிகையாகாது.

பணம் சம்பாதிக்க வேண்டும் ரம்மி விளையாட துவங்கிய நபர்கள் நாளடைவில், இழந்த பணத்தை மீட்க எப்படியாவது பணம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாட துவங்குகிறார்கள்.

கடன் வாங்கி, வீட்டுப்பத்திரத்தை விற்று, நகையை அடகு வைத்து ரம்மியில் விளையாட பணம் தயார் செய்து பின்னர் ஒட்டுமொத்த பணத்தையும் இழந்து விட்ட விரக்தியில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

அண்மையில், சென்னை மணலி பகுதியை சேர்ந்த பவானி, ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளானதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் ரம்மி விளையாட்டுக்கு எதிரான அதிர்வலைகளை அதிகரித்துள்ளது.

தனது சகோதரர்களிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியது மட்டுமின்றி கையில் இருந்த 20 சவரன் நகைகளையும் அடகு வைத்து ரம்மி விளையாடிய பவானி அத்தனை பணத்தையும் இழந்துள்ளார்.

பணத்தை இழந்த துயரம் மற்றும் நெருக்கும் கடன்சுமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பவானியின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.

இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் விளாத்திகுளத்தை சேர்ந்த பிரகாஷ், கல்லூரி படிப்பை முடித்த பிறகு சதா ஆன்லைன் ரம்மி விளையாடி அடிமையாகியுள்ளார். மூன்று லட்சத்தை இழந்த பிறகும், வீட்டில் பணம் கேட்டவாறு இருந்துள்ளார். கடைசியாக அவர் வீட்டில் பத்தாயிரம் கேட்டு தராத அன்று மனமுடைந்த பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், போரூரை சேர்ந்த பிரபுவும் 35 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளார். அந்த பணத்தை இழந்ததாலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்று தொடர்ந்து அதிகரித்து வரும் ரம்மி தொடர்பான தற்கொலைகளை தடுக்க முதற்கட்டமாக ஆன்லைன் ரம்மியை சட்டப்பூர்வமாக தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

2020ஆம் ஆண்டு இதே போன்றதொரு சூழ்நிலை தலைதூக்கிய போது அப்போதைய தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசர தடை சட்டம் கொண்டுவந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய அரசு அளித்த காரணங்கள் போதுமானதாக இல்லை என்றும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் புதிய விதிகளை அரசு கொண்டு வரலாம் என தெரிவித்த நீதிபதிகள் அவசர தடை சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர்.

கடந்த ஆட்சியில் சட்டம் கொண்டு வர முயன்ற நிலையில், தற்போதைய ஆட்சி, ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் அவலநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக காட்டமாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், இத்தகைய உயிர்கொல்லியாக செயல்படும் ரம்மி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றன.

இது தொடர்பாக அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக DGP சைலேந்திர பாபு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் விளம்பரங்களில் பிரபல நடிகர்களை பயன்படுத்தி விரிக்கும் வலையில் மக்கள் விழுந்து ஏமாற கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் ரம்மியினால் அடுத்தடுத்த அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மியினால் ஏற்படும் நிதி இழப்பு, மன உளைச்சல், தற்கொலைகள் மற்றும் சமுதாய பாதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது தமிழக அரசு.

நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் IIT நிபுணர் சங்கரராமன், மனநல மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார் மற்றும் கூடுதல் டிஜிபி வினித் தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆணையத்தை, இரண்டு வாரங்களில் ஆதாரங்களின் அடிப்படையுடன்  அறிக்கையை தாக்க  முதல்வர் உத்தரவிட்டுள்ளது ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நம்பிக்கை அளிக்கும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.