ஆதார் அட்டை இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். 12 இலக்க எண்களை கொண்ட இந்த அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆதார் அட்டையில் பெயர் அல்லது முகவரியில் தவறு இருந்தால் அரசு நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் இதில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், ஆதார் சேவை மையத்தில் சென்று அவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கும் சில வரம்புகள் உள்ளன.
ஆதாரில் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும். இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே திருத்த முடியும். முகவரி மாற்றத்தை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம்.
