மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சருமான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். தனது பாராமதி தொகுதியில் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 8 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் இன்று காலை 8.15க்கு மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளார்.
அஜித் பவாருடன் 2 பாதுகாவலர்கள், கட்சி நிர்வாகி ஒருவர், விமானி ஒருவர் என 5 பேர் இருந்துள்ளார். 8.45 மணி அளவில் விமானம் பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அஜித் பவார் உள்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அஜித்பவார் பயணித்த விமானமானது டெல்லியை தளமாகக் கொண்ட சார்ட்டர் நிறுவனமான VSR-க்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்பது தெரியவந்துள்ளது.
பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
