Saturday, December 21, 2024

549 நாட்களுக்குப் பிறகு வீடு
திரும்பிய கொரோனா நோயாளி

உலகெங்கிலும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள்
ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களில்
குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஆனால், 549 நாட்களுக்குப்
பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து அமெரிக்கர்
ஒருவர் வீடு திரும்பியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது,

நியூமெக்சிகோவைச் சேர்ந்த டோனல் ஹண்டருக்கு 2020 ஆம் ஆண்டு,
செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஓராண்டுக்கும்
மேலாக வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது 24 மணி நேரத்தில்
விடுவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோனல் வென்டிலேட்டரில்
வைக்கப்பட்டார். அப்போதுதான் டோனல் சிறுநீரக நோயாளி என்பதும்
15 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்துவருவதும் தெரியவந்தது. தற்போது
முழுமையாகக் குணமடைந்துவிட்டார் டோனல்.

குணமடைந்துள்ள அவர் மார்ச் 4 ஆம் தேதி குதிரைபோல ஆரோக்கியமாகத்
தனது இல்லத்துக்கு வந்துசேர்ந்தார். அவரைக் குடும்பத்தினரும் உறவினர்களும்
நண்பர்களும் சுவரொட்டிகள் ஒட்டியும் பலூன்கள் பறக்கவிட்டும், பூக்கள்
தூவியும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

தற்போது அவரது குடும்பத்தினர் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.

மருத்துவமனையில் டோனல் சிகிச்சையில் இருந்த 549 நாட்களிலும்
டோனலின் மனைவி ஆஷ்லேவும் அவரது குடும்பமும் ஆதரவாக
இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news