பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படத்தில், இளையரஜா இசையமைப்பில் வெளியான பாடல்கள் இடப்பெற்றது. தனது அனுமதி இல்லாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
“அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலுக்கான உரிமை இளையராஜாவிடம் உள்ளது. அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனிடையே, ‘கருத்த மச்சான்’ பாடலை ‘டியூட்’ படத்தில் இருந்து நீக்க 7 நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதி நிராகரித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
