Friday, May 9, 2025

வீண் கார் உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர்

பழுதடைந்த கார் உதிரிபாகங்களைக்கொண்டு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார் இளைஞர் ஒருவர்.

பிரேசில் நாட்டின் ஜோனோ டயஸ் நகரத்தைச் சேர்ந்த இளைஞரான ஜெனிசிஸ் கோம்ஸ், சிறுவயதிலிருந்தே விமானப் பயணத்தில் ஆர்வமாக இருந்துள்ளார். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தானே சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க விரும்பியுள்ளார்.

தன்னுடைய விருப்பத்தை நண்பரிடம் தெரிவித்துள்ளார் கோம்ஸ். நண்பரும் அதற்கு சம்மதித்து மோட்டார் சைக்கிள், லாரி, மிதிவண்டி ஆகியவற்றில் பயன்படுத்தி வேண்டாம் என்று தூக்கியெறியப்பட்ட உதிரிபாகங்களை சேகரிக்க உதவிசெய்துள்ளார்.

மொத்தமாக அவற்றையெல்லாம் சேகரித்த பிறகு, புதிய ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கிவிட்டார் கோம்ஸ். போக்ஸ்வேகன் காரின் எந்திரத்தைப் பயன்படுத்தி இந்த ஹெலிகாப்டரை இயங்க வைத்துள்ளார்.

முதல் பயணமாக இந்த ஹெலிகாப்டரில் ஜோனா கோம்சும் அவரது நண்பரும் தங்களின் சொந்த நகரின்மேல் பயணித்துள்ளனர். மிகவும் இனிமையாக அமைந்த அந்தப் பயணத்தை எண்ணி மெய்சிலிர்த்த கோம்ஸ் தற்போது உலகம் முழுவதும் பயணித்து மக்களைத் திகைக்க வைத்துள்ளார்.

கண்டுபிடிப்புகளுக்கு பொருளாதாரமோ கல்வியோ வயதோ தடையில்லை என்பதையே கோம்ஸின் செயல் நிரூபித்துள்ளது.

Latest news