தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே மழை பதிவாகி இருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பருவமழையில் குறைந்தளவு காணப்பட்டது.
இந்த நிலையில் நாளை 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது படிப்படியாக தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்க நிலையில் இதன் மூலமாக வருகிற 16-ந்தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இதனால், வருகிற 20-ந்தேதி வரையில் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 17, 18-ந்தேதிகளில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
