தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 17-ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழையும், 18-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும், 19-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
