தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி கடும் வெயில் பதிவாகி வருகிறது. இந்த அதிக வெப்பநிலை காரணமாக கோடை கால நோய்கள் மற்றும் பல்வேறு வைரஸ் தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதால், அவர்கள் அவசியமின்றி பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், வெப்ப அலை காரணமாக ஏற்படும் வெப்பவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) சம்பவங்களை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பத்தை குறைக்க சிலர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்துக்கொள்வது கவலைக்குரியதாக உள்ளது.
குறிப்பாக ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை தன்னிச்சையாக பயன்படுத்துவது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெப்பவாதம் ஏற்பட்டவர்களுக்கு மயக்கம் அல்லது கடும் சோர்வு இருந்தால், உடனடியாக நிழலான மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் அவர்களை ஓரமாக படுக்கவைத்து பராமரிக்க வேண்டும்.
அவர்களுக்கு தண்ணீர், இளநீர் அல்லது மோர் போன்ற பானங்களை அளித்து உடல் வெப்பநிலையை குறைக்க உதவ வேண்டும். மேலும், ஈரமான துணியை உடலில் வைத்து துடைப்பதும் பயனுள்ளதாக இருக்கும். காய்ச்சல் என தவறாக நினைத்து மருந்துகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், அது உடல்நலத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கோடை காலத்தில் எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
