இந்தியாவில் உள்ள பெரிய தனியார் வங்கிகளில் முதன்மையான HDFC வங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. வங்கியில் கடன் வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, வங்கியானது தனது கடன் வழங்கும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை (MCLR) 0.10% குறைத்துள்ளது.
இந்த மாற்றம், நவம்பர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாகக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும், கட்ட வேண்டிய மாதாந்திர தவணை (EMI) குறையும். இதனால் பணம் மிச்சமாகும்.
HDFC வங்கியின் MCLR வட்டி விகிதம் இப்போது 8.35% முதல் 8.60% வரை உள்ளது. இதற்கு முன்பு இது 8.45% முதல் 8.65% வரை இருந்தது. இதன்படி, கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனின் காலத்தை பொறுத்து, 5 பைசா முதல் 10 பைசா வரை வட்டி குறையும் பலனைப் பெறுவார்கள். இந்த வட்டி விகித குறைப்பால், வட்டி மாறிக்கொண்டே இருக்கும் திட்டத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர EMI தொகை சற்று குறையும்.
HDFC வங்கியின் இந்த MCLR குறைப்பு, ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக கடன் விண்ணப்பிப்பவர்களுக்கும் பெரிய நன்மை பயக்கும். வட்டி விகிதம் குறைவதால், மக்கள் மொத்தமாக கட்ட வேண்டிய வட்டி குறையும், மேலும் EMI சுமை குறையும்.
