மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? வாங்காதவர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் வசிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் பெண்களுக்குத் தமிழக அரசு பல்வேறு நிதி உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல கோடிப் பெண்களுக்குப் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இருப்பினும், சில நிபந்தனைகள் காரணமாக ஒரு குறிப்பிட்ட சதவீத பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காமல் போயிருக்கலாம்.

அத்தகைய சூழலில், படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் பெண்களுக்குத் தமிழக அரசு வழங்கும் மற்றுமொரு மாத உதவித்தொகைத் திட்டம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. ‘வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும் நிதியுதவியைப் பெற முடியும்.

இந்தத் திட்டம் குறிப்பாகப் படித்து முடித்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள், இந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதாவது, உரிமைத்தொகை கிடைக்காத அதே சமயம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்குத் தான் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் படித்த பெண்கள் பலர் வீட்டில் இருந்தாலும், தங்களுக்கு இப்படி ஒரு உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேல்நிலைக்கல்வி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் தமிழக அரசிடமிருந்து நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும்.

இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிப் பெண்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படுகிறது; அவர்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மாதம் 600 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது. நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ‘டிஎன் வேலைவாய்ப்பு’ (TN Employment) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனிலோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன், உங்கள் வேலைவாய்ப்புப் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும், இதற்கான இதர நிபந்தனைகளையும் சரிபார்த்துக் கொள்வது அவசியம். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத படித்த பெண்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறிய பொருளாதார ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related News

Latest News