GST வரிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
முந்தைய நிலையில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த GST விகிதம், இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. புதிய விகிதம் இன்று நடைமுறைக்கு வந்ததால், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் போன்றவற்றின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்கள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை சுமார் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சாக்லேட், பாஸ்தா, நூடுல்ஸ் ஆகியவற்றின் GST, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் மலிவாகியுள்ளது. அதேபோன்று பனீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள், நொறுக்குத்தீனி ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
வீட்டு உபயோக மின்சாதனங்களில் ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 அங்குலத்துக்கு மேற்பட்ட டிவி, டிஷ்வாஷர் போன்றவை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் விலை சுமார் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. 1,200 சிசி-க்கும் குறைவான கார்கள், 350 சிசி-க்கு உட்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 18 சதவீத GST மட்டுமே விதிக்கப்படுகிறது.
மேலும், டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளுக்கான வரி 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், டிராக்டர்களின் விலை 23,000 முதல் 63,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. மருத்துவ உபகரணங்களுக்கு 5 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவை மலிவாக கிடைக்கும். இதோடு, காப்பீட்டுத் திட்டங்கள் முழுமையாக GST விலக்கு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
