நாளுக்குநாள் UPI முறையில் பணம் அனுப்பும் வசதி விரிவடைந்து கொண்டே செல்கிறது. முன்னணி வங்கிகளே தங்களது ATMகளை இழுத்து மூடும் அளவுக்கு, இந்தியா முழுவதும் UPI நீக்கமற எங்கும் நிறைந்து காணப்படுகிறது.
பயன்படுத்த எளிதாக இருப்பதும், மிகக்குறைந்த தொகையையும் இதன்மூலம் அனுப்பலாம் என்பதும் பயனர்களுக்கு வசதியாக போய் விட்டது. இதனால் ஒவ்வொரு மாதமும், UPI பயனர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
ஏகப்பட்ட வசதிகள் இருந்தாலும் கூட இதிலும் பண மோசடிகள் நடைபெறவே செய்கின்றன. இதைத் தடுக்க செயலிழந்த மொபைல் எண்களை நீக்குவது தொடங்கி, Transaction நேரத்தை குறைத்தது வரை, NPCI ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
என்றாலும் சைபர் மோசடிகளை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. இந்தநிலையில் UPI மோசடிகளுக்கு செக் வைக்கும் விதமாக, Financial Fraud Risk Indicator சுருக்கமாக FRI எனப்படும் புதிய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) , ” சைபர் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையில், இந்த நிதி மோசடி ஆபத்து குறிகாட்டியை (FRI) அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இது நிகழ்நேர மோசடி கண்டறிதல் மற்றும் தடுப்புக்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பகுப்பாய்வு கருவியாகும். வங்கிகள், UPI சேவை வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செயல்படக்கூடிய நுண்ணறிவுடன் அதிகாரம் அளிக்கும். டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கு முன்பு ஆபத்தான மொபைல் எண்களைக் குறிக்க உதவும்,” என்று தெரிவித்து உள்ளார்.
FRI என்பது ஆபத்து அடிப்படையிலான வகைப்பாடு அளவீடு ஆகும். இதில் மொபைல் எண்களை உள்ளிட்டால் அவற்றை ஆராய்ந்து நடுத்தர, உயர் அல்லது மிக அதிக ஆபத்து என்று வகைப்படுத்தி விடும். எனவே இந்த FRI UPI நிதி மோசடிகளை தடுக்க, பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.
UPI பொறுத்தமட்டில் Google Pay, Phone Pe, PayTM ஆகிய 3 தளங்கள் வழியாக மட்டுமே, சுமார் 90 சதவீத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்த FRI குறிகாட்டி வசதியை மேற்கண்ட தளங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
எனவே இந்த FRI வசதி இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை, சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.