மத்திய பிரதேச மாநிலத்தின் மைஹர் மாவட்டத்தில் உள்ள பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், அந்த உணவு தட்டுகளில் அல்லாமல், நோட்டு மற்றும் புத்தகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்களில் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்து சாப்பிடும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுத் திட்டப் பிரிவு பொறுப்பாளருக்கு, பணியில் மெத்தனமாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்தை முன்வைத்து மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். “இதுதான் உங்கள் நல்லாட்சியா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
