அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்ட 20 மல்டி ஆக்சில் வால்வோ குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் சேவையை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வால்வோ மல்டி ஆக்சில் பேருந்தின் நீளம் 15 மீட்டராகும். ஒவ்வொரு பேருந்தும் ரூ.1.75 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்தின் முன்புறத்திலும் பின்புறத்திலும் எண்ம வழித்தட பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. 2×2 சீட்டிங் அமைப்புடன் மொத்தம் 51 இருக்கைகள் உள்ளன.
பெரிய அளவிலான ஜன்னல்கள், மொபைல் சார்ஜிங் வசதி, மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், சென்சார்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செமி ஸ்லீப்பர் வகையில், முழங்கால்கள் வரை நீட்டிக்க வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்தின் உள்ளே தண்ணீர் தெளிப்பான்களுக்கான சிறப்பு குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன.
