பயனர்கள் தங்களின் பழைய ஜிமெயில் யூசர்நேமை மாற்றிக் கொள்ளும் வசதியை கூகுள் சோதனை அடிப்படையில் உருவாக்கி வருகிறது. இதன் மூலம், புதிய கூகுள் கணக்கை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அதே கணக்கில் புதிய ஜிமெயில் முகவரியை தேர்வு செய்ய முடியும்.
இந்த மாற்றத்தால் Google Drive, Google Photos, YouTube, Play Store போன்ற சேவைகளில் உள்ள தரவுகள், வாங்கிய சந்தாக்கள் அல்லது கணக்கு வரலாறு எதிலும் எந்த மாற்றமும் அல்லது பாதிப்பும் ஏற்படாது. பழைய ஜிமெயில் ஐடி, ரிகவரி மெயிலாக சேமிக்கப்படுவதால் கணக்கின் பாதுகாப்பும் தொடரும்.
ஒருமுறை யூசர்நேம் மாற்றம் செய்த பிறகு, பழைய ஜிமெயில் ஐடிக்கும் புதிய ஜிமெயில் ஐடிக்கும் வரும் மெயில்கள் அனைத்தும் ஒரே இன்பாக்ஸிலேயே கிடைக்கும். மேலும், லாகின் செய்யும்போது இரு மெயில் முகவரிகளையும் பயன்படுத்த முடியும்.
இந்த வசதியில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒருமுறை ஜிமெயில் யூசர்நேம் மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காலத்தில், பழைய ஜிமெயில் ஐடிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு இருக்கும். அதே நேரத்தில், அந்த பழைய ஜிமெயில் ஐடியைப் பயன்படுத்தி புதிய Google கணக்கை உருவாக்க முடியாது. ஒரு Google கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே ஜிமெயில் யூசர்நேம் மாற்ற முடியும்.
