சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெரிசலை குறைக்க நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த நான்காவது ரயில் பாதை ரூ. 757.18 கோடி செலவில் 30.02 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட உள்ளது. புதிய பாதையில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.
தற்போது இந்த வழித்தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் பயணிகள் சேவையில் உள்ளன. இருப்பினும் மூன்று ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன.
நான்காவது பாதை அமைக்கப்பட்டால், ரயில்கள் நெரிசல் இன்றி இயங்க உதவுவதுடன், பயணிகளின் பயன்பாடு 136 சதவீதமாக உயரும்.
யாருக்கு இது வசதியாக இருக்கும்?
இந்த திட்டம் செங்கல்பட்டு வரை மின்சார ரயில் சேவையை நீட்டித்து பயணிகளின் நெரிசலை தணிக்கும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு இதுபோன்ற திட்டம் மிகப் பயனுள்ளதாக அமையும்.
புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளுக்கும் இது வசதியாக இருக்கும்.
