இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் எடுக்கப்பட உள்ளதென ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ விகிதத்தை 25 பிபிஎஸ் குறைத்த ரிசர்வ் வங்கி, அதனை 6.5% லிருந்து 6.25% ஆகக் குறைத்தது. இதேபோல் இன்னும் இரண்டு முறை குறைப்பு செய்யப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் மட்டும் அல்லாமல், ஆகஸ்ட், அக்டோபர், மற்றும் டிசம்பர் மாதங்களிலும் தலா 25 பிபிஎஸ் வீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்த நிதியாண்டிற்குள் மொத்தமாக 100 பிபிஎஸ் வரை குறைப்பு செய்யும் திட்டத்தை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஏன் முக்கியம் தெரியுமா? ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிலிருந்து வணிக வங்கிகள் கடன் வாங்கும் போது செலுத்தும் வட்டி. இதே விகிதத்தை அடிப்படையாக கொண்டு, வங்கிகள் நமக்கு வீடு, கார் போன்ற கடன்களுக்கு வட்டி நிர்ணயம் செய்கின்றன.
அதாவது, ரெப்போ விகிதம் குறையும்போது நமக்கு கிடைக்கும் கடன்களின் வட்டியும் குறையும். இதன் மூலம், உங்கள் வீட்டு கடனுக்கான EMI குறைய வாய்ப்பு அதிகம்.
இதுவரை வங்கிகள் உங்கள் அனுமதி இல்லாமல், ரெப்போ விகிதம் உயரும் போது EMI காலத்தை நீட்டித்து வந்தன. ஆனால் இனிமேல், உங்கள் ஒப்புதல் இல்லாமல் வங்கிகள் EMI காலம் அல்லது தொகையை மாற்ற முடியாது. இது ஒரு பெரிய மாற்றம்.
உதாரணமாக, ஒரு மாதத்தில் ரூ.30,000 EMI செலுத்தும் ஒருவர், வட்டி உயர்ந்தால் அந்த தொகை ரூ.35,000 ஆக மாறலாம் அல்லது 20 வருட காலம் 25 வருடங்களாக நீடிக்கலாம். ஆனால் இனிமேல், இந்த மாற்றங்கள் உங்களது ஒப்புதலுடன் மட்டுமே நடக்க முடியும்.
இந்த மாற்றம், வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு உண்மையான நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை… எதிர்பார்க்கப்படும் வட்டி குறைவுகளால், விரைவில் உங்கள் கடன் சுமை குறைய வாய்ப்பு மிக அதிகம்.
நீங்கள் வீடு வாங்க யோசித்து கொண்டிருந்தால், இது போன்ற நேரம் மிகச் சிறந்த வாய்ப்பு!