சென்னை மாநகர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னையில் ரூ.44 கோடி செலவில் 36 புதிய பூங்காக்கள் மற்றும் 11 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
2026 முதல் 2031ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ள இந்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகும். இதில், நகர்ப்புற பசுமை, பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி இடங்களை மேம்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.34.45 கோடி மதிப்பில் 36 பூங்காக்களும், ரூ.9.52 கோடி மதிப்பில் 11 விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
மணலி, தண்டையார்பேட்டை, ஆலந்தூர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் 11 விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட உள்ளன.
செந்தூர் குமரன் நகர், பெரியார் நகர், அன்பு வளர்மதி நகர், முகப்பேர், கத்திப்பாரா, நெல்சன் மாணிக்கம் சாலை, பீட்டர்ஸ் சாலை, கண்ணகி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பூங்காக்கள் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பசுமைப் பகுதிகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை மாநகராட்சி தனது 15 மண்டலங்களில் சுமார் 1,000 பூங்காக்களையும், 400 விளையாட்டு மைதானங்களையும் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
