ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை மத்திய ஆதார் ஆணையமான யுஐடிஏஐ (UIDAI) தற்பொழுது வெளியிட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையில் முகவரி அல்லது அடையாளச் சான்றுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை, இன்னும் ஒரு முழு ஆண்டுக்கு நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு. அதாவது, வரும் ஜூன் 14, 2027 வரை ஆன்லைன் மூலமாக உங்கள் ஆதாரைத் தடையின்றி இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.
பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான இலவச ஆன்லைன் சேவை முடிவுக்கு வரப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் காட்டிய அதிக ஆர்வம் காரணமாக இந்த வசதியை 2027 ஜூன் வரை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வ குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் ஒன்று கவனிங்க, இந்த இலவச சேவை ஆன்லைன் போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் நேரடியாக ஆதார் மையங்களுக்குச் சென்றால் வழக்கமான கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த ‘எம்-ஆதார்’ (mAadhaar) செயலி இனி பயன்பாட்டில் இருக்காது. பழைய செயலியை முழுமையாகத் திரும்பப் பெற முடிவு செய்துள்ள ஆதார் ஆணையம், அதற்குப் பதிலாகப் புத்தம் புதிய மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘நியூ ஆதார்’ (New Aadhaar App) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆப் வெளியான வெறும் மூன்று மாதங்களிலேயே சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த புதிய செயலியில் க்யூ-ஆர் கோட் (QR code) மூலம் உங்கள் ஆதாரைப் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளலாம், மொபைல் எண் மற்றும் முகவரியை மிக எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதுவரை சுமார் 28 லட்சம் பேர் இந்த செயலி மூலமாகத் தங்கள் மொபைல் எண்களைப் புதுப்பித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
