Friday, December 5, 2025

தங்கத்தின் அடுத்த ஆட்டம்! 2026-ல் விலை எங்கோ போகப்போகுது!

தங்கத்தில் பணம் போட்டவர்கள் எல்லாம் இப்போது பெரிய கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். காரணம், இந்த ஒரே வருடத்தில் தங்கத்தின் விலை சுமார் 53 சதவிகிதம் வரை ராக்கெட் வேகத்தில் ஏறியிருக்கிறது. ஆனால், இந்த ஆட்டம் இத்தோடு நிற்காது, உண்மையான ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம் என்று உலக தங்க கவுன்சில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பையும் எகிற வைத்துள்ளது.

உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ‘தங்கத்தின் எதிர்காலம் 2026’ என்ற அறிக்கையின்படி, வரும் 2026-ம் ஆண்டில், தங்கத்தின் விலை இப்போது இருப்பதை விட, 15 முதல் 30 சதவிகிதம் வரை உயர வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், உலகத்தில் அங்கங்கே நிலவி வரும் போர் மற்றும் அரசியல் பதற்றங்கள்தான். இதனால், பங்குச்சந்தை போன்ற ஆபத்தான இடங்களில் பணத்தைப் போடுவதை விட, தங்கத்தில் போட்டால் பத்திரமாக இருக்கும் என்று மக்கள் நம்புவது, தங்கத்தின் விலையை எங்கேயோ கொண்டுபோகும் என்று அந்த அறிக்கை சொல்கிறது. அதுமட்டுமல்ல, உலகின் பெரிய பெரிய நாட்டு வங்கிகளே தங்கத்தை வாங்கிக் குவிப்பதும், முதலீட்டு நிறுவனங்கள் டன் கணக்கில் தங்கத்தை வாங்குவதும் இந்த விலையேற்றத்திற்கு இன்னொரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கதைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஒருவேளை, தங்கத்தின் விலை 5 முதல் 20 சதவிகிதம் வரை சரியவும் வாய்ப்புள்ளது என்று அதே அறிக்கை ஒரு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது. அது எப்படி நடக்கும்? அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் எல்லாம் சூப்பராக வெற்றிபெற்று, அமெரிக்கப் பொருளாதாரம் நாம் எதிர்பார்ப்பதை விட வேகமாக வளர்ந்தால், கதை தலைகீழாக மாறிவிடும். அப்போது, அமெரிக்க வங்கி வட்டியைக் கூட்ட வேண்டியிருக்கும், டாலரின் மதிப்பும் பயங்கரமாக ஏறும்.

டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தின் விலை பொதுவாகக் குறையும். அப்போது, மக்கள் தங்கத்தை விற்றுவிட்டு, அதிக லாபம் தரும் பங்குகளில் பணத்தைப் போடத் தொடங்குவார்கள். இதனால், தங்கத்தின் விலை சரியத் தொடங்கும். ஆக, தங்கம் இப்போது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி போல இருக்கிறது. ஏறவும் வாய்ப்பிருக்கிறது, இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தங்கம் வாங்க நினைப்பவர்களும், விக்க நினைப்பவர்களும், கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்காமல், கொஞ்சம் நிதானமாக யோசித்துச் செயல்படுவது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News