Monday, December 1, 2025

சர்ப்பிரைஸ் தந்த தங்கம்., தங்க மார்க்கெட்டில் தலைகீழ் மாற்றம்?

சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 110 ரூபாய் விலை குறைந்து 11,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு சவரனுக்கு 880 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் 93,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 92,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் இன்று விலை சற்று சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு 121 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 12,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கேரட் தங்கம் இன்று 12,567 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று 1,01,504 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 968 ரூபாய் விலை சரிந்து 1,00,536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அடுத்த சில மாதங்களில் வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. தற்போதைய தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலத்தில் வட்டி நிலை மாற்றம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃபெடரல் ரிசர்வ் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 5 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைந்து வரும் நிலையில், புதிய தலைவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்க உள்ளார். இந்த ஆண்டு முடிவிற்குள் பெயர் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம் சர்வதேச நிதி சந்தையில், குறிப்பாக தங்க விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் தொடர் முரண்பாட்டில் உள்ளன. ஜெரோம் பவலின் கொள்கைகள் குறித்து டிரம்ப் தொடர்ந்து கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு வருகிறார். உலகளாவிய வர்த்தகத்துக்கு அவர் தொடங்கிய வரி போரால் அமெரிக்காவும் பல நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் மோசமாக இருக்கும் என பவல் முன்பே எச்சரித்துள்ளார்.

பவல் நீக்கப்பட்டு புதிய தலைவர் பொறுப்பேற்றால் வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு அதிகம். வட்டி குறைந்தால், வங்கிகளில் டாலர் சேமிப்பவர்களுக்கு ஆதாயம் குறைந்து, அவர்கள் பணத்தை பிற முதலீடுகளுக்கு மாற்றுவார்கள். இதன் விளைவாக டாலர் மதிப்பு குறையலாம். பொதுவாக இப்படியான சூழலில் பல முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க முனைவார்கள். அதனால் தங்கத்தின் விலை வேகமாக உயரும். எனவே டிரம்ப் எடுக்கும் தீர்மானங்கள் வரும் நாட்களில் தங்க சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News