கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் தங்க விலையை ஏறுமுகத்திலேயே வைத்திருந்தது. இதன் எதிரொலியாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43,000த்தை தாண்டியது.
ஜனவரி 31 ஆம் தேதி 42,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், ஒன்றாம் தேதி 43,320 ரூபாயாக உயர்ந்தது. அதன் பின், ஒரே நாளில், 720 ரூபாய் விலை அதிகரித்து பிப்ரவரி மூன்றாம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 44,040 ஆக உயர்ந்து தங்கம் வாங்க நினைப்பவர்களை மிரட்டியது. இந்நிலையில், 1920ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 21 ரூபாய் என்ற தகவல் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
1961ஆம் ஆண்டில் 10 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை, 1980ஆம் ஆண்டில் 1000 ரூபாயை தாண்டியது. 2006ஆம் ஆண்டில் 5000 ரூபாயை விட உயர்ந்த தங்க விலை, 2008ஆம் ஆண்டிற்கெல்லாம் 10,000 ரூபாயை தாண்டி சென்று விட்டது.
2010ஆம் ஆண்டில் 15,000 ரூபாய் நிலவரத்தில் இருந்த தங்க விலை, 2015இல் 20,000 ரூபாயை பின்னுக்கு தள்ளி விலையில் முன்னேறியது.
2019ஆம் ஆண்டு 30,000 ரூபாய் விலையில் பயணிக்க தொடங்கிய தங்க விலை, 2020ஆம் ஆண்டு 43,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த சில நாட்களில், 44,704 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, 640 ரூபாய் குறைந்து, பிப்ரவரி நான்காம் தேதியன்று 42,680 ரூபாய் விலையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.