மதிப்பீட்டு நிறுவனமான வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் தங்கம் விலை அவ்வாண்டு இறுதிக்குள் 3600 அமெரிக்க டாலர் வரை விலை உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிஃப்டியை ஒப்பிடுகையில் தங்கம் விலை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே சமயம் MCX தங்கம் விலை 28 சதவீதமும், கோல்ட் ETF திட்டங்கள் சுமார் 42 சதவீதமும் லாபம் கொடுத்துள்ளன. அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3600 டாலரை எட்டிவிடும் என கணிக்கப்படுகிறது. இது இந்தியா ரூபாய் மதிப்பில் 3 லட்சத்திற்கு மேல் என்பது சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.
ஏனெனில் 2025ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பலமான முதலீட்டுத் தேவை ஆகியவை இருக்கக்கூடும். இந்த காரணங்கள் தங்கத்தின் விலையை உயர்த்தலாம் என தரகு நிறுவனம் நம்புகிறது.
கடந்த 20 ஆண்டு தரவுகளை அலசும்போது, தங்கம் கடந்த 14 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக பணவீக்க சமயங்களில் உச்சத்தை தொட்டுள்ளது. நிஃப்டி 50 இன் 11% உயர்வுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று வருடங்களில் தங்கம் சராசரியாக 23% ஆண்டு வருமானத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கிடையே, தங்கம் விலை நேற்று 22 கேரட் ஒரு சவரன் ரூ.73,880 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 440 குறைந்து ரூ. 73,440 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ. 9,235 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 55 குறைந்து ரூ. 9,180 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.