இதய நோய் என்பது ஒரே நாளில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய நோய் அல்ல. நமது தினசரி வாழ்க்கை முறையில் உள்ள சில தவறான பழக்கங்கள், இதயத்தை மெதுவாக பாதித்து, காலப்போக்கில் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் உடலுழைப்பு குறைந்த வாழ்க்கை முறை, மாற்றமடைந்த உணவுப் பழக்கங்கள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கின்றன.
இதய நோய் வராமல் இருக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கியமான தவறான பழக்கங்களை உடனடியாக கைவிடுவது அவசியம். இதனால் இதய நோய் அபாயம் குறைவதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
முதல் பழக்கம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது.
தற்போதைய வேலை கலாச்சாரம் பலரை நீண்ட நேரம் அமர்ந்தே பணியாற்ற வைக்கிறது. இதனால் உடலின் இரத்த ஓட்டம் குறைந்து, கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்க ஆரம்பிக்கின்றன. இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் அபாயம் உயரும். இதைத் தவிர்க்க, அடிக்கடி எழுந்து சிறு நடைப்பயிற்சி மேற்கொள்வதும், தினமும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் அவசியம்.
Also Read : ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்
இரண்டாவது பழக்கம், போதுமான தூக்கமின்மை.
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் தேவையான அளவு தூங்குவதில்லை. தூங்கினாலும், தரமான மற்றும் ஆழமான தூக்கம் கிடைப்பதில்லை. தேவையான தூக்கம் கிடைக்காதபோது, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் உடலினுள் ஏற்படும் அழற்சி அதிகரித்து, இதய நோய் அபாயம் உயர்கிறது.
மூன்றாவது பழக்கம், உடல் அறிகுறிகளை புறக்கணிப்பது.
உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்றவை இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் பலர் இவற்றை கவனிக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் நோய் தீவிரமடைந்த பின்னரே மருத்துவரை அணுகும் நிலை ஏற்படுகிறது. எனவே, தொடர்ந்து இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
நான்காவது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் உடல் எடை அதிகரிப்பதற்கு, இன்சுலின் எதிர்ப்பிற்கும், உடலினுள் வீக்கம் ஏற்படுவதற்கும் காரணமாகின்றன. இவை அனைத்தும் இதய நோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாகும்.
Also Read : திங்கள் கிழமைகளில் மாரடைப்பு வரும் ஆபத்து அதிகம்., மருத்துவர்கள் எச்சரிக்கை
ஐந்தாவது பழக்கம், மன அழுத்தமிக்க வாழ்க்கை.
இன்றைய பரபரப்பான உலகில் பலர் தொடர்ந்து மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட கால மன அழுத்தம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கச் செய்து, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இந்த நிலை நீடிக்கும் போது, இதயம் மற்றும் இரத்த நாள்களில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது.
எனவே, இந்த தவறான பழக்கங்களை தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதய நோய்களை பெருமளவு தடுக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
