எகிப்தில் இன்று தொடங்க உள்ள காசா அமைதி உச்சி மாநாடு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல் சிசி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இணைந்து தலைமை தாங்குகிறார். இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்றாலும், அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் அமைதியை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஹமாஸ் குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தி 1,200 பேரை கொன்று, 250 பேரை பிணையாகக் கைதுசெய்தனர். இதையடுத்து, இஸ்ரேல் காசா பகுதியை இரண்டாண்டுகளாக கடுமையாக தாக்கியது. அந்த தாக்குதலில் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீட்டில் சமீபத்தில் எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன் அடிப்படையில் இஸ்ரேல் படைகள் ஒரு பகுதி வாபஸ் பெறப்பட்டது. மேலும், ஹமாஸ் அமைப்பு இன்று மீதமுள்ள 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், இஸ்ரேல் சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் குழுவினர் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ட்ரம்ப் வலியுறுத்திய ‘ஆயுதங்களை கைவிட வேண்டும்’ என்ற நிபந்தனையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் இந்த மாநாட்டில் உரையாற்ற வேண்டுமென கோரியிருந்தாலும், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எகிப்தின் ஷரம் எல் ஷேக் நகரில் நடைபெறும் இம்மாநாட்டில், காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, காசா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நிலை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
