காசாவை கடந்த 20 ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பு தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் காசாவில் போரை தொடங்கியிருக்கிறது. இந்த போர் தற்போது மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக பல ஆயிரம் பேர் காசாவின் தெருக்களில் ஊர்வலம் சென்ற சம்பவம் மீண்டும் உலகை ஒரு விசை உலுக்கியுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா இருப்பதால் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது. இதையடுத்து காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து வந்தது. இதற்கிடையே தான் தற்போது காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் காசாவிற்காக துருக்கி கட்டி கொடுத்த ஒரு புற்றுநோய் மருத்துவமனை குண்டுவீசி தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் காசாவில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். வடக்கு காசா பகுதியான பெய்ட் லகியாவில் திடீரென்று அவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது காசாவை விட்டு ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
இந்த போராட்டம் இன்னும் தீவிரமாகும் பட்சத்தில் அது ஹமாஸ் அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மக்கள் இரவு, பகல் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் காசாவின் அமைதியை மனதில் வைத்து அவர்கள் ஹமாஸ் அமைப்பினரை வெளியேற்றுவார்களா என்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.