நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: தினமும் சுமார் 28 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தை சிக்கல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் விநியோகம் பாதிக்கப்படாமல் சீராக நடைபெற்று வருகிறது.
மேலும், 87 சதவீத சிலிண்டர் முன்பதிவுகள் ஆன்லைன் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் நேரில் சென்று பதிவு செய்வதை விட, தொலைபேசி அழைப்பு (IVRS) மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சரியான பயனாளர்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, ஒருமுறை கடவுச்சொல் (OTP) முறையும் பயன்படுத்தப்படுகிறது. விநியோகம் போதுமான அளவில் இருப்பதால், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சில விநியோகஸ்தர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற புகார்கள் பொதுமக்களிடமிருந்தும் சமூக ஊடகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் 68,000 திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 48,000-க்கும் மேற்பட்ட பதுக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 141 விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 5 விநியோக நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தவறான தகவல்களை நம்பி மக்கள் தேவையில்லாமல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து அச்சப்பட வேண்டாம் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
