ஈரானில் நீடித்து வரும் போர் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி (LPG) விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் இந்த நிலை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் எல்பிஜி கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், உணவுப் பொருட்கள், டீ, காபி போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல துறைகளும் எரிவாயு பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை, போதுமான அளவில் இருப்பு இருப்பதாகவும் அரசு உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், முக்கியமான அறிவிப்பாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், எல்பிஜி இணைப்பை PNG-க்கு மாற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த வசதி இருக்கும் இடங்களில் அதை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, PNG வசதி இருந்தும் அதற்கு மாற மறுக்கும் குடும்பங்களின் எல்பிஜி இணைப்பை துண்டிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே எரிபொருளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், வணிக நோக்கங்களுக்கும் PNG பயன்பாட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் PNG எளிதில் கிடைக்கும் என்பதால், அதன் பயன்பாட்டை விரிவுபடுத்த முயற்சி செய்யப்படுகிறது.
PNG வசதி உள்ள பகுதிகளில் அதனை பயன்படுத்தச் செய்து, வசதி இல்லாத பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தை சீராக வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. PNG-க்கு மாறாமல் தொடர்ந்தும் எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களின் இணைப்பை அடுத்த மூன்று மாதங்களில் நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
