சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ராமதாஸ் பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, பொதுச் செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை அங்கீகரித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:-
அன்புமணியால் டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார். பாமக ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை சதியால், சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால் நடக்காது. பதவி ஆசையால் உருவாக்கப்பட்டது பாமக அல்ல.
தற்போது அன்புமணியை நம்பி சென்றவர்கள் கலக்கமடைந்துள்ளனர். அன்புமணி செய்வது மாபெரும் துரோகம். உங்கள் ஒரு மகன் அபகரிக்க நினைத்தால், உங்களுக்கு லட்சம் மகன்களாக நாங்கள் நிற்கிறோம்.
ராமதாசுக்கு அன்புமணி செய்தது துரோகம், அன்புமணிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். பாமகவை உங்களால் கைப்பற்ற முடியாது. பாமக என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால் பாமக. அன்புமணியின் துரோகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனி எடுபடாது. அன்புமணியின் அரசியல் கதை முடிந்தது என பேசியுள்ளார்.
